கடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும்.
அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க வேண்டிய காலம் அது.
வலியுடன் வெளிவரும் எழுத்தாணி, சில தேவையில்லாத கிறுக்கல்களை சந்திக்கும். நான் பயனுள்ள எழுத்தாணி என்னை ஏன் இப்படி தேவையில்லாத கிறுக்கல்களுக்கு ஆளாக்குகிறீர்கள் என்னை வைத்து கவிதை எழுதுங்கள்,பாடல் எழுதுங்கள், சரித்திரம் எழுத்துகள் என்று சொல்ல நினைத்தாலும், சொல்லி தீர்த்தாலும் யாரின் காதுகளுக்கும் சென்றடையாது. காலம் இட்ட கட்டளையாக அனைத்தையும் அனுபவித்தே தீர வேண்டும்.
பிறகு பல பாடங்கள், கவிதைகள், கதைகள், சரித்திரம் என நாளும் எழுதி தேயும்.திடீரென ஒருநாள் தன் நீளத்தில் பாதி மட்டுமே கொண்டிருக்கும்.கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் வாங்கியவர் சலித்து கொள்வார்.
தொடர்ந்து எழுதும்,கூர் தீட்டப்படும் ,மீண்டும் எழுதும்….. போதும் விட்டுவிடுங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்க ஆள் இன்றி தொடர்ந்து எழுதலாகும்.
அது என்ன அந்த பென்சிலுக்கு மட்டும் பட்டு துணி படுக்கை,கண்ணாடி அறை நான் பார்த்து அதை நீங்கள் தொட்டது கூட கிடையாது என்று கேட்க நினைத்தாலும், அது ஒரு மதிப்பு மிக்கவர் கொடுத்த பரிசு ஆயிற்றே எப்படி எழுத தோன்றும்.காலம் முழுவதும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதாயிற்றே…..
எல்லாருக்கும் கிடைக்குமா அது போன்ற வாழ்க்கை. அரசன் கைகளில் இருப்பதும் ஆண்டி கைகளில் இருப்பதும் ஒரே பொருளாக இருக்கலாம் ஆனால் இருக்கும் இடம் வேறாயிற்றே.
முழு நீளத்தில் முக்கால்வாசி தேய்ந்து இறுதியில் ஒருநாள் பிடித்து எழுத நீளம் இல்லாததால் போதும் உன் சேவை என்று குப்பையில் தூக்கி வீசப்படும்.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அங்கு சில காலம் கழித்தாக வேண்டும். முக்தி அடையும் முன் அதையும் அனுபவித்தாக வேண்டும்.
இறுதியில் ஒரு நாள் தன்னை பயன்படுத்தியவர்களுக்கும், வீணடித்தவர்களுக்கும், புகழ்ந்தவர்களுக்கும், இகழ்ந்தவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு தன் முழு உருவை இழக்கும்.
அந்த பென்சில் தான் நீ…. அதே பென்சில் தான் நான்…..
பட்டு கம்பளமும் கண்ணாடி அறையும் எல்லோருக்கும் கிடைக்காதல்லவா….
எதார்த்தத்தை ஏற்றுகொள்…….