fbpx

Bal Gangadhar Tilak History in Tamil – பால கங்காதர திலகர் வாழ்க்கை வரலாறு

பால கங்காதர திலகர் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக காந்தி சாத்வீக வழியில் போராடினார் என்றால் திலகர் தீவிர வழியில் போராடியிருக்கிறார்.

இருவருடைய நோக்கமும் ஒன்றுதான். அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் வெவ்வேறு. புரட்சிகரமான கருத்துகளை உடையவர் திலகர். அன்றைய இளைஞர் கூட்டம் அவருடைய வழியை ஆர்வமுடன் பின்பற்றியது.

திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை என கருதப்படும் பாலகங்காதர திலகர் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

திலகர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில் 1856 ஜூலை 23-ல் தந்தை கங்காதரராவ், தாய் பார்வதிபாய் குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார்.


பெற்றோர்கள் வைத்த பெயர் கேசவராவ். சிறுவயதில் தந்தையிடமே கணிதமும், சம்ஸ்கிருதமும் கற்றார்.

அமீர் கான் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

பூனாவில் உள்ள சிட்டி ஸ்கூலில் திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கினார். திலகருக்குப் பத்து வயதான போது தாய் காலமானார். பின் பூனா டெக்கான் கல்லூரியில் பி.ஏ படித்தார். 1879-ல் எல்.எல்.பி (சட்டப்படிப்பு) முடித்து வழக்கறிஞரானார்.

திலகர் இலக்கியம் மற்றும் போராட்டத்தில் திலகரின் பங்கு:

திலகருக்கு இலக்கியங்களில் ஈடுபாடு அதிகம். மராட்டா, கேசரி என்று இரண்டு பத்திரிக்கைகளும் நடத்தினார். அச்செய்தித்தாள்களில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.பாரதத் தாயின் சுதந்திரம் ஒன்றே அவருடைய கனவாய் இருந்தது.

அதற்குப் பாடுபடுவதையே தம்முடைய உயிர்மூச்சாய் கொண்டிருந்தார் அவர்.
பத்திரிக்கையில் அவர் வெளியிட்ட காரசாரமான செய்திகளுக்காக அரசு அவருக்கு சிறை தண்டனை வழங்கியது. ஆனாலும் மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து அரசுக்கெதிராக அவர் தொடர்ந்து போராடவே செய்தார்.

பால கங்காதர திலகர் சிறை மற்றும் அரசியல் வாழ்க்கை :

தம்முடைய பத்திரிக்கையில் அரசைத் தாக்கி, எழுதியமைக்காக திலகர் பதினெட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். பின் 1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது.

அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து
பத்திரிக்கைகளிலும் எழுதினார்.

இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் பல மேடையில் அவருடைய ஆவேச
உரையைக் கேட்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். ‘உங்கள் வீட்டின் திறவுகோலை நீங்கள் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவர் கையில் கொடுப்பது அறிவுடைய செயலாகாது.நாட்டை அடுத்தவர் கையில் விட்டு வைத்திருக்கும் முட்டாள் தனத்தை நாம் செய்திருக்கிறோம்.

சொந்த நாட்டில் பராரிகளாய் வாழும் அவலம் எதற்கு? வந்தேறிகளை
விரட்டியடிப்போம்.நாம் நினைத்தால் இன்றே விடுதலை, நம்முடைய நாட்டை நாமே ஆள்வோம்’ என்று அவர் வீரமுழக்கம் செய்வதைக் கேட்டு இளைஞர்களுக்கு நெஞ்சம் நிமிர்ந்தெழும், நரம்புகள் புடைக்கும், தோள்கள் உயரும்.அவர் மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டார்.

நாடெங்கும் அடக்க முடியாத அளவு கிளர்ச்சி வெடித்தது. திலகரைக் கலகக் காரர் என்று குற்றம் சாட்டி அரசு சிறையில் அடைத்தது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

பால கங்காதர திலகர் விடுதலை மறுப்பு :

திலகர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் அரசு சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்கத் தயாரா இருந்தது. அரசாங்கத்தை எதிர்ப்பதில்லை என்று அவர் உறுதியளிக்க வேண்டும்.


அது தான் அரசின் நிபந்தனை, ஆனால் நிபந்தனையை ஏற்று விடுதலையாக திலகர் மறுத்து விட்டார். அது அவருடைய வீரத்தை, மன உறுதியை, சுயமரியாதையை உலகுக்கு உணர்த்தும் செயலாக அமைந்தது.அடைந்தால் சுதந்திரம் இல்லையேல் வீர சொர்க்கம் திலகரின் இந்த வீர முழக்கம் பாரத இளைஞர்களின் தாரக மந்திரமானது.

வாழ்க்கை நெடுகிலும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர், ஆண்டுக்கணக்கில் சிறையிலிருந்தார். மக்கள் அவரை ‘லோகமான்யர் (உலகத்தின் ரட்சகர்) என்று அன்புடன் அழைத்தனர்.

பால கங்காதர திலகர் மரணம் :

சுதந்திரத் தீயை மக்கள் மனத்தில் மீண்டெழ செய்த அந்த மகத்தான தலைவர் 1920 ஆகஸ்டு 1 ஆம் நாள் தன்னுடைய 64 வது வயதில் காலமானார். நாடு சுதந்திரமடைந்ததை தம்முடைய வாழ்நாளில் அவர் பார்க்கவில்லை.

ஆனால் என்ன, அவர் கண்ட கனவு நனவாகி இருக்கிறது.இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற
கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.