காலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர்.
ஆங்கில புத்தாண்டு :
ஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி வருடப்பிறப்பு இருந்தாலும், ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டாக ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை இன்று தெரிந்து கொள்வோம்.
தமிழில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காலத்தை கணக்கிடும் முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தாலும், வெறும் 500 வருடங்களாக தான் ஜனவரி ஒன்றாம் தேதியை நாம் ஆங்கில புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.
அதற்கு முன்பெல்லாம் மார்ச் 1-ஆம் தேதி, மார்ச் 25-ஆம் தேதி, நவம்பர் 1-ஆம் தேதி, டிசம்பர் 24 என பல தினங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
ரோமானியர்களின் காலண்டர் :
ரோமானியர்கள் தான் காலெண்டரை முதல்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. ஆனால் 5000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே பஞ்சாங்கம் முறைகளில் நம் முன்னோர்கள் சரியாக நேரம் காலத்தை குறித்துவந்ததற்கு சான்றுகள் இருக்கிறது.
முதன் முதலில் கி.மு. 700 – ஆம் நூற்றாண்டில் ரோமானிய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட காலண்டர் 10 மாதங்கள் 400 நாட்களை கொண்டதாகவும் மார்ச் 1-ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும் கொண்டிருந்தது.
கிமு 46 – ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரோம் நகரை ஆட்சி செய்து வந்த ஜூலியஸ் சீசஸ் தன்னுடைய பெயரில் ஒரு மாதத்தை உருவாக்கி அந்த காலண்டரில் இணைத்தார். அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அகஸ்டியஸ் சீசஸ் என்பவர் தன்னுடைய பங்குக்கு ஒரு மாதத்தை உருவாக்கி வருடத்திற்கு 12 மாதங்கள் என்று கொண்டு வந்தார். அப்படி தான் ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் உருவானது.
அதன் பிறகு ஏசுவின் தாய் மேரி தேவி கர்ப்பமான நாளான மார்ச் 25-ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள். ஏசு பிறந்ததற்கு பிறகு ஈஸ்டர் தினத்தை புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள்.
நாடுகளுக்கான காலண்டர் :
கி.பி. 1500 – ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், கடவுள் வழிபடு போன்றவற்றிக்கு ஏற்ப காலெண்டரை உருவாக்கி பயன்படுத்தி வந்தனர்.
ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வது மிகவும் சிரமமாக இருந்துள்ளது. காலநேரம் ஒவ்வொரு இடத்திற்கு வேறுபடுவது தான் சிரமத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தார்கள். உலகம் முழுவதற்கும் பொதுவான ஒரு காலெண்டரின் தேவை ஏற்பட்டது.
சூரிய காலண்டர் :
அப்போது ஜெர்மனிய பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ் சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு ஒரு காலெண்டரை வடிவமைத்தார் .
அதனை 1582-ஆம் ஆண்டு 13-வது போப்-ஆகா இருந்த கிரிகோரி இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு கிரிகோரியன் காலெண்டர் என்று பெயரும் வைக்கப்பட்டது. அதை தான் இந்த உலகம் இன்று வரை பயன்படுத்தி வருகிறது.
ஏசு பிறப்பதற்கு முன்பு, ரோமானிய கடவுளான ஜோனஸ் என்பதை குறிக்கும் வகையில் தான் ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. அதனால் அந்த மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக வைத்து அந்த மாதத்தின் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
ஜனவரி 1 :
அதனால் தான் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக டிசம்பர் 31-ஆம் தேதி குறுகிய வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது, அடுத்த நாளான ஜனவரி 1-ஆம் தேதி அதிக வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது. இருட்டில் இருந்து வெளிச்சம் பிறக்கும் இந்த நாள் தான் புத்தாண்டாக இருக்க தகுதியான நாளாகவும் சொல்லப்படுகிறது.
புத்தாண்டு என்பது மதுபோதையில் வாகனங்களை ஒட்டிக்கொண்டு, இரைச்சலான சத்தத்துடன் ஆட்டம் போடும் ஒரு நாளாக சமீபகாலமாக நம் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு என்பது அதற்கான நாள் இல்லை.
இதுவரை இருந்த ஒரு வாழ்விலிருந்து புதியதொரு வாழ்விற்கான துவக்கமாக அதை பார்க்கவேண்டும். சூரியன் மறைந்து மீண்டும் உதிக்கும் ஒவ்வொரு நாளும் புத்தாண்டாக கருதவேண்டும்.
நம் காலம் ஒவ்வொரு நாளும் கழிவதை காலெண்டர் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது மறந்துவிடாதீர்கள்……