fbpx

Lal Krishna Advani History in Tamil – எல். கே. அத்வானி் வாழ்க்கை வரலாறு

அத்வானியின் அரசியல் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. கட்சியை வளர்க்க வாழ்க்கை முழுவதும் போராடிய அவருக்கு, அதன் பலன் கிட்டவேயில்லை. பிரதமர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது பழங்கதை ஆனாலும்.

பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார்.

2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ள இவர். இந்தியத் தகவல் துறை,ஒளிபரப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றுவரை அக்கட்சியின் மதிக்கத்தக்க தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் எல். கே. அத்வானியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, கராச்சியில்” ஒரு இந்து சிந்தி குடும்பத்தில் பிறந்தார் எல். கே. அத்வானி என்று அழைக்கப்படும் “லால் கிருஷ்ணா அத்வானி” அவர்கள்.

அதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கலவரத்தில் ஏற்பட்ட பிரிவினையின் போது, கராச்சியில் இருந்து வெளியேறி, அன்றைய மும்பை நகரத்தில் இவருடைய குடும்பம் குடியேறியது.

சௌந்தரபாண்டியன் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார்.


பிறகு மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டக் கல்விப் பயின்று பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆரம்பகாலப் பணிகள் :

கராச்சியிலுள்ள மாடல் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். பின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார்.

அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் பணியாற்றினார். அதற்க்கு பிறகு அரசியல் ஈடுபாடு காரணமாக இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இல் தீவிரமாகத் தன்னை அர்பணித்துக் கொண்டார்.

அரசியல் பயணம் :

ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார் இதுவே இவரின் முதல் பதவி.பின்னர் 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார்.

தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார். 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த “ஜனதா கட்சி” ஆட்சியில் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.கே. அத்வானி அவர்கள், 1980ல் “பாரத ஜனதா கட்சி” அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்டபோது, அதன் பொது செயலாளராக
நியமிக்கப்பட்டார்.

1984ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 1998இல் ஆளும் கட்சி என்ற நிலைக்கு பாரதிய ஜனதா கட்சியை உயர்த்தியதில்
அத்வானியின் பங்கு முக்கியமானது.பின் 1989-ல் நடந்த பொது தேர்தலில், அக்கட்சி 88 இடங்களில் வெற்றிபெற்று வலுவானக் கட்சியாக பெரும் வளர்ச்சி கண்டது. பிறகு 1989 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரத்தினை கையிலெடுத்த அத்வானி அவர்கள், ராமர் பிறந்த புண்ணிய பூமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுவதும் ரதயாத்திரைத் தொடங்கி, பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கைப் பெற்றார்.

பின்னர், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் “பாரத ஜனதா கட்சி” ஆட்சி அமைத்த பொழுது, இந்திய உள்துறை அமைச்சராகத் தேர்தெடுக்கப்பட்ட எல். கே. அத்வானி அவர்கள், பிறகு இந்தியத் துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு வரை நீடித்த “பாரத ஜனதா கட்சி”, மே 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இதனால் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவே, 2004 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாரத ஜனதா கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் அத்வானி பொறுப்பேற்றார்.

2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தபோது, ‘குறைந்து செல் விளைவு கோட்பாடு’ என்பது அத்வானிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம். தன்னால் வளர்த்து விடப்பட்ட நரேந்திர மோதிக்கு, தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை அத்வானிக்கு ஏற்பட்டது.

சர்ச்சை கருத்து :

2014 தேர்தலில் நரேந்திர மோதி போட்டியிடுவதற்கு அவர் தெரிவித்த எதிர்ப்புகளால் அத்வானியின் மனத்தாங்கல் வெளிப்பட்டது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்த தான் நிராகரிக்கப்ப்டுவதை அவரால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் முன்னரே முன்நிறுத்த வேண்டாம் என்றும், நரேந்திர மோதியின் பெயரை முன்மொழிந்தால் வாக்குகள் சிதறும் என்றும் அத்வானி அச்சம் தெரிவித்தார். ஆனால் மோதியின் தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் அத்வானி ஓரம்கட்டப்பட்டார்.

பிரதமர் வாய்ப்பு கிடைக்கவில்லை :

அத்வானியே பிரதமராக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்பியதாக வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்திலேயே பேச்சுக்கள் நிலவின. ஆனால் அந்த தந்திரமும் அத்வானிக்கு பிரதமர் வாய்ப்பை கொடுக்கவில்லை.

2001ஆம் ஆண்டு இறுதிவாக்கில், ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த ராஜூ பையா, வாஜ்பேயை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கும் சூழ்நிலையை அத்வானி உருவாக்கினார்.

இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று ராஜூ பையா வாஜ்பேயிடம் கூறினார்.

வாஜ்பேயி பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அரசியலை கரைத்துக் குடித்திருந்த வாஜ்பேயி இந்த தந்திர யுக்தியை சமார்த்தியமாக கையாண்டார்.

இல்லற வாழ்க்கை :

அத்வானி 1965 ஆம் ஆண்டு கமலா அட்வானி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்த் அத்வானி என்ற மகனும் பிரதிபா அத்வானி என்ற மகளும் பிறந்தார்கள்.

மனவருத்தத்திற்கு காரணம் :

வயதின் காரணமாகவோ அல்லது புதிய தலைமையிடம் அனுசரித்துப் போகும் தன்மை இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார் அத்வானி.

ஆனால் உண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு ஆலோசகர் என்ற நிலையும் அத்வானிக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதுதான் அத்வானியின் மனவருத்தத்திற்கு காரணம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.