K.S.Chithra History in Tamil – கே. எஸ். சித்ரா வாழ்க்கை வரலாறு

‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார்.

திரைப்படத்துறையில் 25 ஆண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர் சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் ஆறு முறை தேசிய விருதையும், ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

தன்னுடைய வசீகரக் குரலால் புகழ்பெற்று விளங்கும் கே. எஸ். சித்ரா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1963 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கே.எஸ் சித்ரா அவர்கள், இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகளாக பிறந்தார்.

மம்முட்டி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறுவயதிலேயே திறமையை வளர்த்துக்கொண்ட இவர், தன்னுடைய 5 வயதிலேயே வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினார்.

சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது பின் இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார், பின் எம்.ஏ பட்டம் பெற்றார்.

இசைப்பயணம் :

இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே கே. ஜே. யேசுதாசுடன் இணைத்து பல பாடல்களை பாடியுள்ளார்.

அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். பின் இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. பின் அவருக்கு இளையராஜாவின் இசையில், ‘நீ தானா அந்தக்குயில்’ திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” மற்றும் “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” பாடல்கள் மூலம் அறிமுகம் ஆனார்.

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு பல தமிழ் பாடல்களை பாடி தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவர்ந்தார்.

சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், சங்கர் – கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா

பின் தேசிய விருதையும்’ வென்று, புகழின் உச்சிக்கு சென்றார். அவர் படாத இந்தியா மொழிகளே இல்லை.

மற்ற இசையமைப்பாளர்கள் :

சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின இவரால்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, பி. லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார்.


ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா. விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.

இல்லற வாழ்க்கை :

சித்ரா விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்தார். அவர் பொறியியல் வல்லுனர். இவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார்.

சித்ராவை தாக்கிய துயரம் :

எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக தன்னுடைய ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

விருதுகள் :

1986 ஆம் ஆண்டு சிந்து பைரவி திரைப்படத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது.

1987 ஆம் ஆண்டு நகக்சதங்கள் மலையாளத் திரைப்படத்தில் “மஞ்சள் பிரசடவம்” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.

1989 ஆம் ஆண்டு ‘வைஷாலி’ மலையாளத் திரைப்படத்தில் “இந்துபுஷ்பம் சூடி நில்கும் ராத்திரி” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.

1996 ஆம் ஆண்டு ‘மின்சார கனவு’ திரைப்படத்தில், ‘மானா மதுரை’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது.

1997 ஆம் ஆண்டு‘விராசத்’ திரைப்படத்தில் “பாயலி சுன் முன் சுன் முன் சுன்” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.

1997 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது.

2004 ஆம் ஆண்டு ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.

2005 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

2011 ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம்.

2011 ஆம் ஆண்டு ஆந்திரபிரதேச அரசு கலாச்சார கவுன்சில் மூலம் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருது.

25 ஆண்டுகளுக்கும் மேல் திரைப்படப் பின்னணிப் பாடகியாக இருக்கும் இவர்புகழ் நாடு முழுக்க பரவியுள்ளது.

Leave a Comment