17000-கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த காமராஜர் என்று போற்றப்பட்ட காமராஜர் ஆட்சி நிர்வாகத்திலும் தலை சிறந்தவர் என்பது பலரும் அறியாத ஒன்று.
இவரது ஆட்சி காலத்தில் தான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலி பிரின்டர் தொழிற்சாலை, சேலம் இரும்பு எஃகு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்க இவரால் கட்டப்பட்ட அணைகள் இன்று வரை தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை தீர்த்து வருகிறது.
காமராஜர் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்…..
பிறப்பு மற்றும் இளமை காலம் :
காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் குமாரசுவாமி நாடார் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.இவருக்கு நாகம்மாள் என்ற ஒரு தங்கையும் உண்டு. காமராஜரின் தந்தை ஒரு சிறு வியாபாரி. தொடக்கத்தில் பள்ளி சென்று படித்து வந்த காமராஜர்,தன் 6-வயதில் தந்தையை இழந்த பிறகு பள்ளி படிப்பை கைவிட வேண்டிய நிலைமை உருவானது.பள்ளி படிப்பை கைவிட்ட பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக சில காலம் தன் மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த கட்டுரையை இணையத்தில் கீழ்கண்டவாறு தேடலாம் :
karmaveerar kamarajar speech in tamil, kamarajar katturai in tamil munnurai, kamarajar school speech tamil, kamarajar achievements tamil, kamarajar life history tamil, essay about kamarajar in tamil, kamarajar katturai munnurai, kamarajar tamil katturaigal, kamarajar essay on tamil, kamarajar patri katturai in tamil, about kamarajar life tamil, நான் விரும்பும் தலைவர் பேச்சு போட்டி, நான் விரும்பும் தேசத் தலைவர் கட்டுரை, தேசிய தலைவர்கள் கட்டுரை, naan virumbum thalaivar kamarajar katturai in tamil, நான் விரும்பும் தலைவர் பற்றி கட்டுரை.
இந்திய விடுதலை போராட்டத்தில் காமராஜர்:
சிறு வயது முதலே சுதந்திர போராட்ட தலைவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்ட காமராஜர் பின்னாளில் முழுவதுமாக தன்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டு பலமுறை சிறை சென்றார்.கல்யாண சுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களில் பேச்சுக்கள் காமராஜருக்கு மிகவும் பிடித்தவை. தொடக்கத்தில் “ஹோம் ரூல்” இயக்கத்தின் கீழ் பணியாற்றிய காமராஜர் 1920-ல் தன் 16-ஆவது வயதில் காங்கிரசில் முழு நேர ஊழியராக சேர்ந்தார்.
உப்பு சத்தியாகிரகம் , ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்யாகிரகம், நாக்பூர் சத்தியாகிரகம் போன்ற பல போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர் தன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
தமிழகத்தின் கல்வி புரட்சியில் காமராஜரின் பங்கு:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1953-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
கல்வி தான் இந்த நாட்டை வளமாக்கும் என்பதை ஆழமாக நம்பிய காமராஜர் ராஜாஜி ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி, மூன்று கிலோமீட்டரைக்கு ஒரு மேல் நிலை பள்ளி, ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளி இருக்க வேண்டும் என்ற திட்டம் வகுத்து மேலும் 17000 பள்ளிகளை திறந்தார்.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் பெரும்பாலான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளுக்கு வராததை கண்டு மனம் நொந்த காமராஜர் அவர்களை வரவழைக்க ஒரு திட்டத்தை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வறுமையில் வாடும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே இலவசமாக மதிய உணவு அளிப்பதன் மூலம் அவர்களை பள்ளிக்கு வரவழைக்க முடியும் ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை. மக்களிடம் வரிச்சுமையை ஏற்றினால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது ஒரு அதிகாரி என கூற கேட்ட காமராஜர் கடும் கோபத்துடன் பிள்ளைகளை படிக்க வைப்பதே அரசின் முதல் கடமை, அரசிடம் நிதி இல்லை என்றால் நான் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தினை செயல்படுத்துவேன் என்று அதிகாரிகள் மத்தியில் பேசினார்.
ஒரு முதல்வரே இந்த நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக பிச்சை எடுப்பேன் என்று சொல்ல கேட்ட அதிகாரிகள் பதில் ஏதும் பேசாமல் உடனடியாக திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இயங்கினர். இதன் விளைவாக உதயமானது “மதிய உணவு திட்டம்”. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கல்வி புரட்சி உருவாகி பெருமளவில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் காமராஜரின் பங்கு:
நல்ல அரசு நிர்வாகம் என்பது மக்களை கவரும் திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதல்ல. மக்களிடம் உடனடியாக வரவேற்பை பெறாத ஆனால் நீண்ட காலத்தில் பெரிதும் பயனளிக்க கூடிய திட்டங்களை செயல் படுத்துவதாகும். இதை நன்றாக உணர்ந்த காமராஜர் கல்வி புரட்சியுடன் சேர்ந்து தொழில் புரட்சிக்கும் தமிழகத்தை தயார்படுத்தினார்.
நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை, சேலம் இரும்பு எஃகு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, பாரத மிகு மின் நிறுவனம், போன்ற பல நிறுவனங்கள் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக தொழில் வளர்ச்சியில் வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது தமிழகம்.
நீர் மேலாண்மையில் காமராஜரின் பங்கு:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது நீர் ஆதாரம் என்பதை தெளிவாக அறிந்திருந்த காமராஜர் நீர் ஆதாரங்களை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற பல்வேறு நீர் பாசன திட்டங்கள் இவரது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டதாகும்.
இந்திய அரசியலில் காமராஜரின் பங்கு:
காமராஜர் பதவியை விட கட்சி பணியையும் தேச பணியையும் பெரிதும் நேசித்தார். 9 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த காமராஜர், கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சி பணிக்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கே-பிளான் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு உதாரணமாக தன் முதலமைச்சர் பதவியை பக்தவச்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு தில்லி சென்றார். 1963-ஆம் ஆண்டு அக்டோபர்-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.
கே-பிளான் திட்டத்தின் படி மொராஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, எசு.கே.பட்டேல், செகசீகன்ராம் போன்ற மூத்த தலைவர்களும் பதவியை விட்டு விலகி இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் தேசிய அளவில் காமராஜரின் மதிப்பு உயர்ந்தது. 1964-ஆம் ஆண்டு நேருவின் மறைவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியை இந்திய பிரதமராக்கினார். 1966-இல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தை தொடர்ந்து நேருவின் மகளான இந்திரா காந்தியை அடுத்த பிரதமராக்கினார். இப்படி இந்தியாவின் பிரதமர்களை தீர்மானிக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற தலைவராக விளங்கினார் காமராஜர்.
இறுதி காலம்:
திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றிய காமராஜர் 1975-ஆம் ஆண்டு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, தன் 72-ஆம் வயதில் காலமானார். முதலமைச்சராக இருந்த போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த காமராஜர் இறக்கும் போது அவரிடம் இருந்த சொத்துகள் சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள், 150 ரூபாய் பணம்.
தனக்கென்று அல்லாமல் வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காகவே அர்ப்பணித்த காமராஜரை போற்றும் விதமாக 1976-ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
அவர் மறைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்…. காமராஜர் புகழ் ஓங்குக…..